ராகுல் எதிர்ப்பு

டெல்லி, நவ. 7-
மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் சமூகநலத் திட்டங்கள் மற்றும் நிதியுதவிகளைப் பெற, ஆதார் அட்டைக்கு பதிலாக புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை எண்ணும், பயோமெட்ரிக் சரிபார்ப்பும் கட்டாயமாக்கப்பட உள்ளதாக அந்தத் துறையின் மந்திரி ராஜீவ் ரஞ்சன் சிங் கூறியிருந்தார். இதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: “ஆதாருக்கு பதிலாக வாக்காளர் அட்டையை அடிப்படையாகக் கொண்டு நலத்திட்டங்களின் பயனாளிகள் தீர்மானிக்கப்படுவார்கள் என்று மோடி அரசின் மந்திரி கூறுவது பெரும் சதி. மிகவும் ஆழமான சதி நடந்து வருகிறது. ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்’ என்ற பெயரில் கோடிக்கணக்கான மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டன. எப்போதும் பா.ஜனதா ஆதரவாளர்கள் பெரும்பான்மையாக இருக்கும் வகையில் ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. உங்களுக்கு நலத்திட்டம் கிடைக்குமா, கிடைக்காதா என்பது அதே பட்டியலை வைத்துத்தான் தீர்மானிக்கப்படும். இது வாக்கு திருட்டு மட்டுமல்ல; உரிமை திருட்டும் ஆகும். இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.