
புதுடெல்லி: நவ. 23-
இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பார்த்து தான் வியப்பதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். இந்திய நாகரிகம் உலக நாகரிகங்களில் மிகவும் பழமையானது என்றும், இந்தியாவின் வரலாற்றைப் படிக்கும்போது மிகுந்த வியப்பு ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அளித்த பேட்டியில் புதின் கூறியதாவது: அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது, இந்திய மக்களில் எத்தனை பேர் பிரதான மொழியைப் பேசுகின்றனர் என்று அவரிடம் கேட்டேன்.
அதற்கு பிரதமர் மோடி, இந்திய மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே பிரதான மொழியைப் பேசுகின்றனர் என்றும், இதர இரு பங்கு மக்கள் அவரவர் தாய்மொழியைப் பேசுகின்றனர் என்றும் தெரிவித்தார்.சுமார் 150 கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில், 60 கோடி பேர் மட்டுமே பிரதான மொழியைப் பேசுகின்றனர் என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. பல்வேறு மொழிகள் பேசப்படும் நிலையில், இந்தியாவின் பன்முகத்தன்மை என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்தியாவின் வரலாறும், அதன் நாகரிகத் தொடர்ச்சியும் தனித்துவமானதாகத் தோன்றுகிறது என்று புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் பழங்கால கிறிஸ்தவம், புத்த மதம், யூத மதம் மற்றும் முஸ்லிம் மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வசித்து வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து வாழும் நிலை ரஷ்யாவில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.தற்போது சுயநலம் கொண்ட தலைவர்கள் உக்ரைனை ஆட்சி செய்கின்றனர் என்று குற்றம்சாட்டிய புதின், ரஷ்யாவும் உக்ரைனும் ஒன்றாக நிற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். உக்ரைன் ராணுவ வீரர்கள் சரண் அடைய வேண்டிய அவசியமில்லை என்றும், அவர்கள் ரஷ்யாவின் பக்கம் நிற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.














