
புனே: நவ. 23-
புனேயில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக, 19 வயது மாணவி ஒருவர் லிப்டுக்குள் சுமார் 14 மணி நேரம் சிக்கித் தவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம், புனே லோனி கல்போர் பகுதியில் எம்.ஐ.டி. கலை, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. அங்கு வகோலி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் படித்து வருகிறார். சம்பவத்தன்று வகுப்புகள் முடிந்ததும், அவர் தனியாக லிப்டில் சென்றுகொண்டிருந்தார். அப்போது மின்தடை ஏற்பட்டதால், 5-வது மற்றும் 6-வது தளங்களுக்கு இடையே லிப்ட் நடுவழியில் நின்றுவிட்டது.இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, லிப்ட் கதவைத் தட்டியும், சத்தம் போட்டும் உதவிக்கு அழைத்துள்ளார். பின்னர் தனது பெற்றோரை செல்போனில் தொடர்புகொள்ள முயன்றார். தொலைபேசி அழைப்பு இணைந்ததும், அவர் “ஹலோ” என்று கூறிய அடுத்த நொடியே இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் அவரது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ ஆனது. இதனால் வெளியுலகுடனான அவரது கடைசி தொடர்பும் துண்டிக்கப்பட்டது.
மகளைத் தொடர்புகொள்ள முடியாமல் பதற்றமடைந்த பெற்றோர், பல்கலைக்கழக வளாகம் முழுவதும் தேடினர். மாணவி கிடைக்காததால், போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார், பல்கலைக்கழக ஊழியர்கள், பாதுகாவலர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து இரவு முழுவதும் வளாகத்தில் தேடுதல் நடத்தினர். எனினும், மாணவி லிப்டுக்குள் சிக்கியிருப்பதை யாரும் கவனிக்கவில்லை.மறுநாள் காலை 6 மணியளவில் மின்சார சேவை சீரானதைத் தொடர்ந்து லிப்ட் மீண்டும் இயங்கத் தொடங்கியது.
அப்போது லிப்டுக்குள் மாணவி மயங்கிய நிலையில் இருப்பது தெரியவந்தது.













