
புதுடெல்லி: நவ.11-
சீனாவைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட வலைப்பதிவாளர்கள் மற்றும் நேரலை ஒளிபரப்பாளர்கள், வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள குடிசைப் பகுதிகளை டெல்லியின் பகுதிகள் எனத் தவறாகக் குறிப்பிட்டு வீடியோக்களைப் பதிவிட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வரும் அந்த வீடியோக்களில், இந்தியாவின் வாழ்க்கை நிலை, சுகாதாரம், உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வறுமை குறித்து இழிவான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
“வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்யப்படுவது துரதிர்ஷ்டவசமானது. தவறான கதைகளைப் பரப்புவது, அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களின் நம்பகத்தன்மையை மட்டுமே குறைக்கிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அத்தகைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள குடிசைப் பகுதிகளை இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள பகுதிகள் எனக் குறிப்பிட்டு, சீனாவைச் சேர்ந்த சமூக வலைத்தளப் பிரபலங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பின்னணியில் இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக தவறான தகவல்களையும் இழிவான கருத்துகளையும் பரப்பும் நடவடிக்கைகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.













