
பெங்களூரு, நவ. 11-
தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் இடையே, பெங்களூரு நகரில் பட்டாசு வெடித்ததில் குழந்தைகள் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் கண் காயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த முறை பட்டாசு வெடித்தவர்களை விட, பட்டாசு வெடிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மற்றும் சாலையில் சென்றவர்களே அதிக அளவில் காயமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்டாசு வெடித்ததால் கண்ணில் காயமடைந்தவர்கள் பெங்களூருவில் உள்ள நாராயண நேத்ராலயா, மிண்டோ கண் மருத்துவமனை, சங்கர கண் மருத்துவமனை, நேத்ராதாம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை, பிரபா மருத்துவமனை உள்ளிட்ட பல கண் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலருக்குக் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பட்டாசு வெடித்ததில் தீக்காயமடைந்த பலரும் விக்டோரியா உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். காயமடைந்தவர்களில் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் இருப்பது மிகுந்த கவலையை அளித்துள்ளது.
இதற்கிடையே, தொடையில் பட்டாசு பெட்டியை வைத்துக்கொண்டிருந்த போது தற்செயலாகத் தீப்பொறி பட்டு பட்டாசுகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 21 வயது கர்ப்பிணிப் பெண் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். இதில் இருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
சொந்தமாகப் பட்டாசு வெடித்தபோது 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மீதமுள்ளவர்கள் அருகில் நின்று கொண்டிருந்தவர்கள் ஆவர்.
மிண்டோ கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 50 வழக்குகளில் 20 பேருக்குப் பலத்த காயமும், 20 பேருக்குச் சாதாரண காயமும் ஏற்பட்டுள்ளது. நவம்பர் 8-ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 12 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. காயமடைந்தவர்களில் 5 பேர் குழந்தைகள். 14 பேரில் 12 பேர் மற்றவர்கள் வெடித்த பட்டாசால் காயமடைந்தவர்கள். இவர்களில் 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, 2 பேருக்கு அறுவை சிகிச்சையும், 2 பேருக்குப் சாதாரண சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள். ராய்ச்சூர் மற்றும் தொடபள்ளாப்பூரில் இருந்து தலா ஒருவர் மேல் சிகிச்சைக்காகப் பெங்களூரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சங்கர கண் மருத்துவமனையில் மொத்தம் 40 வழக்குகள் பதிவாகியுள்ளன. காயமடைந்தவர்களின் வயது 3 மாதக் குழந்தை முதல் 46 வயது நபர் வரை அடங்கும். இதில் 5 மாதக் குழந்தை ஒன்று பட்டாசு தீப்பொறி பட்டுத் தீக்காயமடைந்த சம்பவமும் பதிவாகியுள்ளது.
மருத்துவமனை வாரியாகப் பாதிக்கப்பட்டவர்கள் விபரம்:
- நாராயண நேத்ராலயா – 50 பேர்
- மிண்டோ கண் மருத்துவமனை – 50 பேர்
- பிரபா மருத்துவமனை – 25 பேர்
- சங்கர கண் மருத்துவமனை – 25 பேர்














