
லண்டன்: நவ.11-
லண்டனில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் தேசவிரோத நடவடிக்கைகளின் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, பிரிட்டனில் செயல்படும் 50-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி அமைப்புகள், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பகிரங்க கடிதம் அனுப்பியுள்ளன.
இந்திய தேசிய மாணவர் சங்கம் (INSA), பிரண்ட்ஸ் ஆப் இந்தியா சொசைட்டி இன்டர்நேஷனல் (FISI), இந்து சமுதாய அமைப்புகள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து இந்தக் கடிதத்தை அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பும், பார்லிமென்ட் சதுக்கத்திலும் சில அமைப்புகள் நடத்திய போராட்டங்கள் வெறும் கருத்து சுதந்திரம் சார்ந்தவை அல்ல எனக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டு மண்ணில் இருந்து கொண்டு, இந்தியாவின் ஜனநாயக மாண்புகளையும் இறையாண்மையையும் சீர்குலைக்கும் நோக்கில் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியாக அந்தப் போராட்டங்கள் இருந்ததாகவும் அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அத்தகைய போராட்டங்களில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த சில இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களும், காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகளும் தீவிரமாக ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்திய மாணவர் சங்கம் (SFI-UK), இந்திய வெளிநாட்டு காங்கிரஸ் இளைஞர் பிரிவு உள்ளிட்ட அமைப்புகள் முன்னெடுத்த போராட்டங்களில், தீவிரவாத சிந்தனை கொண்ட குழுக்களின் நிதியுதவி அல்லது மறைமுக ஆதரவு இருந்ததா என்பது குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. மாற்றுக் கருத்து தெரிவிப்பது அடிப்படை உரிமை என்றாலும், அதைப் பயன்படுத்தி பொய்ப் பிரசாரம் செய்வதும், வன்முறை மற்றும் பிரிவினைவாதத்தைத் தூண்டுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் ஜனநாயக சுதந்திரத்தைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, அந்நாட்டின் அமைதியைக் கெடுத்து, இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது மத்திய அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.













