
சிக்கபள்ளாபூர், நவ. 11-
தாயைப் பற்றி அவதூறாகப் பேசிய ஆத்திரத்தில், நபரை கல்லால் அடித்துக் கொன்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டம் பாஃகேபள்ளி தாலுகா, மார்கானுகுண்டே கிராமத்தின் வெளிப்புறப் பகுதியில் கடந்த 7-ம் தேதி மதியம் நாகராஜு என்ற நபர் கல்லால் அடித்துக் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து அவரது தாய் நஞ்சம்மா கொடுத்த புகாரின்பேரில் பாஃகேபள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில், ஸ்ரீகாந்த் மற்றும் சசிதர் ஆகிய இருவர் நவம்பர் 9-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
சம்பவத்தன்று நாகராஜு, ஸ்ரீகாந்த் மற்றும் சசிதர் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, ஸ்ரீகாந்தின் தாயைப் பற்றி நாகராஜு மிகவும் கேவலமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த், அருகில் கிடந்த கல்லை எடுத்து நாகராஜுவின் தலையில் போட்டு கொடூரமாகக் கொலை செய்துள்ளார். அதற்கு சசிதரும் உடந்தையாக இருந்துள்ளார். பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்மினி சாஹூ உத்தரவின்பேரில், துப்புத்துலக்கி குற்றவாளிகளைக் கைது செய்த பாஃகேபள்ளி காவல் துறையினர் அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.













