
வாஷிங்டன், அக். 26-
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியால், அடுத்த 20 ஆண்டுகளில் வேலைவாய்ப்புச் சந்தையில் மிகப்பெரிய மாற்றங்களும் நெருக்கடிகளும் ஏற்படும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார். இந்த மாற்றக் காலம் மனித வரலாற்றிலேயே மிகவும் சவாலானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய பில் கேட்ஸ், தொலைபேசி வழி விற்பனை, வாடிக்கையாளர் சேவை மையப் பணிகள், கணக்கு பராமரிப்பு உள்ளிட்ட அலுவலகம் சார்ந்த வேலைகளை செயற்கை நுண்ணறிவு முற்றிலும் கையகப்படுத்தும் வாய்ப்பு உள்ளதாகக் கூறினார். மனிதர்களைவிட வேகமாகவும், குறைந்த செலவிலும், அதிக துல்லியத்துடனும் ஏஐ பணிகளைச் செய்வதால், நிறுவனங்கள் அதன் பயன்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், மனித வடிவிலான ரோபோக்கள் மூலம் கட்டுமானப் பணிகள், விவசாயம், மருத்துவ அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட உடலுழைப்பு சார்ந்த பணிகளையும் எதிர்காலத்தில் இயந்திரங்கள் மேற்கொள்ளக்கூடும் என்று பில் கேட்ஸ் தெரிவித்தார்.செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டால் பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்திச் செலவு பெருமளவு குறைந்து, அவை அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் சூழல் உருவாகலாம் என்றும் அவர் கூறினார். எனினும், மனிதர்களின் வாழ்வாதாரத்தில் வேலை என்பது வருமானத்திற்கான வழி மட்டுமல்ல; அது சமூக அடையாளமாகவும், வாழ்க்கையின் நோக்கமாகவும் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.















