
புதுடெல்லி, அக். 26-
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் எழுதியுள்ள சுயசரிதையில், நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசின் தலையீடு இருந்ததாகக் கூறப்பட்டுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சய் கிஷன் கவுல் எழுதிய ‘விதவுட் ஃபியர் ஆர் ஃபேவர்’ (Without Fear or Favour) என்ற சுயசரிதை இன்னும் வெளியாகவில்லை. எனினும், அந்தப் புத்தகத்தை மேற்கோள் காட்டி சில தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலீஜியம் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பே நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசிடம் ஒப்புதல் பெற முயற்சிக்கப்பட்டதாகவும், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவரின் சாதி குறித்து அரசு கேள்வி எழுப்பியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: “இதுவரை பலர் வெளிப்படையாகப் பேசத் தயங்கிய விஷயங்களை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தற்போது ஆதாரப்பூர்வமாக வெளிக்கொண்டு வந்துள்ளார். நீதிபதிகள் நியமனத்துக்கு முன் அரசுடன் பேச்சுவார்த்தை நடந்ததை முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மறுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அரசின் தலையீட்டை முன்னாள் தலைமை நீதிபதியே ஒப்புக்கொள்ளும்போது, நீதித்துறையின் சுதந்திரம் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்ற கவலை மேலும் ஆழமாகிறது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்தபோது, முந்தைய தீர்ப்பின் சில பகுதிகளை மறுபரிசீலனை செய்ய நேரிடும் எனக் குறிப்பிட்டது. அதன் பின்னர், நீதிபதி கவுலின் ஆலோசனையைப் பெறாமலேயே அந்த வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டதாக அவர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் அன்றாட செயல்பாடுகளில் மத்திய அரசு எந்த அளவுக்குத் தலையிடுகிறது என்பதற்கு இதுவே சான்று.















