
பாரிஸ், அக். 26-
விலைவாசி உயர்வு, வீட்டு வசதித் தட்டுப்பாடு, சீரழிந்து வரும் பொதுச் சேவைகள் மற்றும் அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், அல்பேனியா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இரண்டு வாரங்களுக்கும் மேலாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் லட்சக்கணக்கானோர் வீதிகளில் திரண்டு பேரணி நடத்தினர். பகலில் அமைதியாகத் தொடங்கிய போராட்டங்கள், மாலையில் வன்முறையாக மாறின. பிரான்ஸ் உள்துறை அமைச்சகத்தின் தகவல்படி, சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் 4.10 லட்சம் பேர் பங்கேற்றனர். தொழிற்சங்கங்கள் இந்த எண்ணிக்கை 8 லட்சம் எனத் தெரிவித்தன. நிலைமையைக் கட்டுப்படுத்த 70 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர்.பாரிஸில் போர்ட் டி இத்தாலி முதல் போர்ட் டி வின்சென்னெஸ் வரை நடைபெற்ற பேரணியின் இறுதியில் வன்முறை வெடித்தது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை மற்றும் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் கூட்டத்தைக் கலைத்தனர். பிரான்ஸ் முழுவதும் இதுவரை 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தாலியில் மிலன், ரோம், துரின் ஆகிய நகரங்களில் இளைஞர்களும் மாணவர்களும் திரளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஏற்கெனவே பணியில் இருந்த நூற்றுக்கணக்கான வீரர்களுடன் கூடுதலாக 500 ராணுவ வீரர்களை பிரதமர் ஜார்ஜியா மெலோனி களமிறக்கியுள்ளார்.ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் உள்ள பிளாக்கா டி கட்டலூனியா சதுக்கத்தில் கருப்பு உடை மற்றும் முகமூடி அணிந்த கும்பல், 14-க்கும் மேற்பட்ட கடைகளின் கண்ணாடிகளை உடைத்து பொருட்களைக் கொள்ளையடித்தது. வன்முறையில் ஈடுபட்டதாக நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பன் உள்ளிட்ட நகரங்களில் வாடகை உயர்வு மற்றும் நில உரிமையாளர்கள் எளிதாகக் குடியிருப்பாளர்களை வெளியேற்ற அனுமதிக்கும் சட்டத்துக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். அல்பேனியா தலைநகர் திரானாவில் கல்விக் கட்டணக் குறைப்பு மற்றும் பிரதமர் எடி ராமா ராஜினாமா கோரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கற்கள் வீசப்பட்டன. இதையடுத்து 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் கண்ணீர்ப் புகை, தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர்.















