Home செய்திகள் தேசிய செய்திகள் உடல் தானம், பிஎம் கேர்ஸுக்கு ரூ.1 கோடி

உடல் தானம், பிஎம் கேர்ஸுக்கு ரூ.1 கோடி

ஜபல்பூர், செப். 19- மருத்துவ ஆராய்ச்சிக்காக தனது உடலை தானமாக வழங்குவதாகவும், வருங்கால வைப்பு நிதி மூலம் கிடைக்கும் ரூ.1 கோடியே 10 லட்சத்தை பிஎம் கேர்ஸ் நிதிக்கு அளிப்பதாகவும் மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி அவனிந்திர குமார் சிங் தெரிவித்தார். உத்தரபிரதேசத்தின் எட்டா நகரைச் சேர்ந்தவர் அவனிந்திர குமார் சிங் (62). வழக்கறிஞராக பணியாற்றிய இவர், கடந்த 1990-ம் ஆண்டு கீழமை நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். பின்னர் பல்வேறு நீதிமன்றங்களில் பணியாற்றிய அவர், கடந்த 2023-ம் ஆண்டு மே 1-ம் தேதி மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
சுமார் 37 ஆண்டுகள் நீதித்துறையில் சேவையாற்றிய அவர், கடந்த 17-ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து அன்றைய தினம் ஜபல்பூர் நகரில் அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. அந்த விழாவில் நீதிபதி அவனிந்திர குமார் சிங் பேசியதாவது: “நாம் கடவுளை வழிபடுகிறோம். அவருக்கு சேவை செய்கிறோம். அதோடு மட்டுமல்லாமல், கடவுள் படைத்த அனைத்து உயிர்களுக்கும் சேவை செய்வது நமது கடமை. நானும் எனது மனைவி இந்திராவும் எங்களது உடல்களை மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தானமாக வழங்க முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பான உறுதிமொழிப் பத்திரத்திலும் கையெழுத்திட்டு விட்டோம். வருங்கால வைப்பு நிதி மூலம் எனக்கு ரூ.1 கோடியே 10 லட்சம் கிடைக்கும். இந்தத் தொகை முழுவதையும் பிஎம் கேர்ஸ் நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளேன். எனது வாழ்க்கையின் அனைத்து வெற்றிக்கும் எனது மனைவியே காரணம். எங்களது உடல்களை மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்கவும், வருங்கால வைப்பு நிதியை பிஎம் கேர்ஸ் நிதிக்கு வழங்கவும் எனது மனைவியே ஆலோசனை கூறினார். அதை அப்படியே ஏற்றுக்கொண்டேன். சுமார் 37 ஆண்டு கால நீதிபதி வாழ்க்கையில் நூறு சதவீத நேர்மையை கடைபிடித்துள்ளேன். விமர்சனங்களைப் பார்த்து அஞ்சக் கூடாது. எவ்வித அழுத்தத்துக்கும் ஆளாகக் கூடாது. நேர்மையாகவும் நிதானமாகவும் இருந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று மூத்த நீதிபதி ஒருவர் எனக்கு அறிவுரை கூறினார். அவரது அறிவுரையை கண்டிப்புடன் பின்பற்றினேன். நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும் மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபடுவேன். ஏழைகளுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்குவேன்” என்று தெரிவித்தார்.