Home செய்திகள் தேசிய செய்திகள் காவிரி நீர் திறக்க தமிழக அரசு அவசர மனு

காவிரி நீர் திறக்க தமிழக அரசு அவசர மனு

புதுடெல்லி, செப். 19- காவிரியில் விகிதாசார அடிப்படையில் கர்நாடக அரசு நீர் திறப்பதை உறுதி செய்யவும், பற்றாக்குறை நீரைத் திறக்க உத்தரவிடவும் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனு தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்துக்கு இந்த ஆண்டு மிகவும் நெருக்கடியான நீர் ஆண்டாக உள்ளது. எனவே, கர்நாடகத்தில் இருந்து பிலிகுண்டுலுவில் தமிழகத்துக்கு விகிதாசார அடிப்படையில் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தமிழகத்தின் நீர் தேவையை கருத்தில் கொண்டு, காவிரி நீர் பங்கீட்டில் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட அடிப்படையை கர்நாடக அரசு பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகா நீரை வழங்க உத்தரவிட வேண்டும். தமிழகத்துக்குரிய நீர் பங்கை உரிய காலத்தில், உரிய அளவில் திறந்துவிடுவதற்கு அந்த மாநிலத்துக்கு நீதிமன்றம் தெளிவான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. மேலும், கர்நாடக அணைகளில் போதிய நீர்வரத்து இருக்கும்போதோ அல்லது அணைகள் நிரம்பி வழியும்போதோ மட்டுமே காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதை அந்த மாநிலம் வழக்கமாகக் கொண்டுள்ளது. இதனால், தமிழகத்தின் நீர் தேவைகள் பாதிக்கப்படுவதுடன், நீர் விவகாரத்தில் தமிழகத்துக்கு ஒரு நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. பருவநிலை மற்றும் பாசனத் தேவைகளுக்கு ஏற்ப கிடைக்க வேண்டிய நீர் தாமதமாகவோ, குறைவாகவோ கிடைக்கும் நிலை உருவாகிறது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தால் கடந்த ஜூலை 30, ஆகஸ்ட் 11, ஆகஸ்ட் 25 மற்றும் செப்டம்பர் 8 ஆகிய தேதிகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கர்நாடக அரசு பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.