Home மாவட்டங்கள் பெங்களூர் உத்தரவை ரத்து செய்த சித்தராமையா

உத்தரவை ரத்து செய்த சித்தராமையா

பெங்களூர்: மே 14 –
கர்நாடக மாநிலத்தில் பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி அளிப்பதாக அம்மாநில அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் அதனை நீக்கி முதல்வர் சித்தராமையாக மத அடையாளங்களை பயன்படுத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.கர்நாடக மாநிலத்தில் தற்போது சித்தராமையா முதல்வராக உள்ளார். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முன்னதாக கடந்த ஆட்சியில் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடந்தது. அதாவது கடந்த 2022 ஆம் ஆண்டு கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் மத அடையாளங்களை முன்னிலைப்படுத்தும் ஆடைகளை அணிய தடை விதிக்கப்பட்டது.பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் ஆங்காங்கே போராட்டங்களும் நடந்தன. இதனையடுத்து நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியிலேயே பள்ளிகளில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என கூறியிருந்தார். இதற்கு பதவியேற்றதும் நடவடிக்கை எடுக்கபட்ட நிலையில் தற்போது கர்நாடக மாநில பள்ளிக்கல்வித் துறை புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
“ஹிஜாப், தலைப்பாகை (டர்பன்), பூணூல் (புனித நூல்) மற்றும் ருத்ராட்சம் போன்ற மத அடையாளங்களை மாணவர்கள் நிறுவனச் சீருடைகளுடன் அணிய அனுமதிக்கிறது. இவை ஒழுக்கம், பாதுகாப்பு அல்லது மாணவர் அடையாளம் காணுதல் போன்றவற்றுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்ற நிபந்தனை உண்டு.
மத அல்லது பாரம்பரியச் சின்னங்களை அணியவோ அகற்றவோ மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். கல்வி நிலையங்கள், “அறிவியல் மனப்பான்மை, பகுத்தறிவு, சமத்துவம், கண்ணியம், சகோதரத்துவம், ஒழுக்கம், பரஸ்பர மரியாதை, சமூக நல்லிணக்கம், அரசியலமைப்பு ஜனநாயகப் பொறுப்புகளை” மேம்படுத்த வேண்டும். “அரசியலமைப்பு ரீதியான மதச்சார்பின்மை என்பது தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு எதிரானது அல்ல; மாறாக, இது அனைவருக்கும் சமமான மரியாதையையும், நிறுவன நடுநிலைமையையும், பாரபட்சமற்ற நடத்தையையும் உறுதி செய்வதாகும்” என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.