
சென்னை, நவ. 8-
உலகம் முழுவதும் இந்து மதத்தினர் தீபாவளி பண்டிகையை இன்று உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இந்து மதத்தினரும் அதிகாலையிலேயே எழுந்து, நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடைகள் அணிந்து பண்டிகையைத் தொடங்கினர். தொடர்ந்து வீடுகளில் கடவுள்களுக்கு படையலிட்டு, குடும்பத்தினருடன் வழிபாடு நடத்தினர். தீபாவளி என்பது இந்து மதக்கடவுளான கிருஷ்ணர், நரகாசுரனை வதம் செய்ததை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். வட இந்தியாவில், இந்து மதக்கடவுளான ராமர் தனது 14 ஆண்டுகால வனவாசத்தை முடித்துக்கொண்டு, லட்சுமணன் மற்றும் சீதையுடன் அயோத்திக்குத் திரும்பிய தினத்தை தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர். இதையொட்டி, வீடுகளில் மக்கள் விளக்கேற்றி, கோலமிட்டு, இனிப்பு மற்றும் பலகாரங்கள் செய்து பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகள் அணிந்து, குடும்பத்தினருடன் சேர்ந்து பட்டாசுகளை வெடித்து வருகின்றனர். வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தீபங்கள் ஏற்றப்பட்டு, பண்டிகை உற்சாகம் காணப்படுகிறது.புதிதாகத் திருமணமான தம்பதியினர், மணமகளின் வீட்டில் முதல்முறையாகக் கொண்டாடும் தீபாவளி ‘தலை தீபாவளி’ என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், பல குடும்பங்களில் தலை தீபாவளி நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பாரம்பரிய முறையில் வழிபாடு நடத்தி, புத்தாடை அணிந்து, இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.














