
மும்பை, ஜூன் 4- தெற்கு மும்பையின் வரலாற்று அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் புகழ்பெற்ற ‘ஏர் இந்தியா’ பலமாடிக் கட்டடத்தை, மகாராஷ்டிர மாநில அரசு ரூ.1,601 கோடிக்கு முறைப்படி வாங்கியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத் தலைமைச் செயலகமான மந்த்ராலயாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தப் பரிமாறிக் கொள்ளப்பட்டது. ஏர் இந்தியா அஸெட்ஸ் ஹோல்டிங் நிறுவனம் (ஏஐஏஹெச்எல்) மற்றும் மாநிலப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் இதில் கையெழுத்திட்டதாக அரசுத் தரப்பு அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. தெற்கு மும்பையின் நரிமன் பாயிண்ட் பகுதியில்,
கடலை நோக்கியவாறு அமைந்துள்ள இந்த 23 மாடி வணிகக் கட்டிடம், மாநில அரசுக்குச் சொந்தமான நிலத்தில் கடந்த 1974-ம் ஆண்டு கட்டப்பட்டது. ஆரம்ப காலகட்டங்களில் இதன் அதிநவீன மின்தூக்கிகளில் பயணிப்பதற்காகவே பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர். வரலாற்றுச் சிறப்புமிக்க மும்பையின் முக்கிய அடையாளமாக இக்கட்டிடம் விளங்கி வருகிறது. ஏர் இந்தியா நிறுவனம் தனியார்மயமாக்கப்பட்டு, அதனை டாடா குழுமம் வாங்கிய பிறகு, நிறுவனத்தின் முதன்மை அல்லாத சொத்துக்கள் அனைத்தும் மத்திய அரசின் ஏர் இந்தியா அஸெட்ஸ் ஹோல்டிங் லிமிடெட் அமைப்பின் வசம் ஒப்படைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தெற்கு மும்பையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு அருகில் அரசு அலுவலகங்களை அமைப்பதற்குக் கடுமையான இடநெருக்கடி நிலவி வந்ததால், இந்த இடத்தை வாங்குவதற்கு மகாராஷ்டிர அரசு கடந்த 2021-ம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.



















