
புதுடெல்லி, அக். 28-
2027-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் பணிகளுடன் நேரடியாகத் தொடர்புடைய அதிகாரிகளை இடமாற்றம் செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த 5 மாநிலங்கள் உள்பட 17 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலைச் சுருக்கமான முறையில் திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. மேலும், இந்த 5 மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறலாம் என்றும் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், 5 மாநிலங்களுக்கும் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், தேர்தல் பணிகளுடன் நேரடியாகத் தொடர்புடைய அதிகாரிகள் தொடர்பான இடமாற்ற உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தங்களது சொந்த மாவட்டங்களிலேயே பணியாற்றி வரும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும். அதேபோல், கடந்த 4 ஆண்டுகளில் ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுகள் பணியை நிறைவு செய்துள்ள அதிகாரிகளும் அந்த மாவட்டங்களில் இருந்து மாற்றப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை, 2027-ம் ஆண்டு மே 31-ம் தேதிக்குள் ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுகள் பணியை நிறைவு செய்யவிருக்கும் அதிகாரிகளையும் அங்கிருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. தேர்தல் பணிகளுடன் நேரடியாகத் தொடர்புடைய அதிகாரிகள் தொடர்பான இந்த இடமாற்ற நடவடிக்கையை 5 மாநிலங்களிலும் மேற்கொள்ளுமாறு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.













