Home செய்திகள் உலக செய்திகள் ஒரேகான் துவக்கப்பள்ளியில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி

ஒரேகான் துவக்கப்பள்ளியில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி

பெண்ட்: அக். 16-
அமெரிக்காவின் ஒரேகான் மாகாணம், பெண்ட் நகரில் உள்ள ‘சில்வர் ரெயில்’ துவக்கப்பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 3 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய நபரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் சிலர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.அமெரிக்காவில் கல்வி நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பெண்ட் நகரில் உள்ள சில்வர் ரெயில் துவக்கப்பள்ளியில் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதியம் சுமார் 1 மணியளவில், பள்ளி வளாகத்துக்கு வெளியே நின்றிருந்த ஒரு கார் மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பள்ளியைச் சுற்றி வளைத்தனர்.
அதற்குள் அந்த நபர் பள்ளியை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த கொடூரத் தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததில் அவர்கள் ரத்த வெள்ளத்தில் சிக்கி பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தாக்குதல் நடத்திய நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.
பள்ளிக்குச் சென்ற பிஞ்சுக் குழந்தைகள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையான இந்தச் சம்பவம், அமெரிக்கா முழுவதும் பெரும் அதிர்வலையையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கல்வி நிலையத்தில் நடந்த இந்தத் தாக்குதல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.