
பாரிஸ், அக். 15- ஃபிளை துபாய் விமானச் சம்பவத்தைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்குச் செல்லும் விமானங்களில் குறிப்பிட்ட சில நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் பணியாற்ற இஸ்ரேல் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவதாக ஏர் பிரான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஏர் பிரான்ஸ் வெளியிட்ட அறிக்கையில், “மற்ற அனைத்து விமான நிறுவனங்களைப் போலவே, ஏர் பிரான்ஸ் நிறுவனமும் சேவை வழங்கும் நாடுகளின் அதிகாரிகள் விதிக்கும் நுழைவு விதிகளை தனது வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இருவரும் பின்பற்றுவதை உறுதி செய்யக் கடமைப்பட்டுள்ளது. அதன்படி, டெல் அவிவ் நகருக்கு இயக்கப்படும் விமானங்களுக்காக இஸ்ரேல் அதிகாரிகள் அமல்படுத்தியுள்ள புதிய விதிமுறைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. இஸ்ரேலின் புதிய கொள்கையின்படி, பாகிஸ்தான், ஈரான், சவுதி அரேபியா, அல்ஜீரியா, துனிசியா உள்ளிட்ட முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் 31 நாடுகளின் குடியுரிமை பெற்ற விமானப் பணியாளர்களுக்கு ஏர் பிரான்ஸ் தடை விதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் ‘என்12’ செய்தி சேனல் வெளியிட்ட தகவலின்படி, அந்நாட்டின் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு அமைச்சகம் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, இஸ்ரேலிய வான்வெளிக்குள் நுழையும் விமானங்களின் பைலட்டுகள் மற்றும் கேபின் பணியாளர்கள், இஸ்ரேலுடன் தூதரக உறவு இல்லாத நாடுகளின் குடியுரிமையையோ அல்லது இரட்டைக் குடியுரிமையையோ பெற்றிருக்கக் கூடாது.இந்த நடவடிக்கை தேசிய அடிப்படையில் பணியாளர்களிடம் பாகுபாடு காட்டுவதாக அமைவதுடன், பிரெஞ்சு தொழிலாளர் சட்டத்தின் கீழ் சட்டப் போராட்டங்களுக்கும் வழிவகுக்கும் என்று சட்ட வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். புதிய விதியால் இஸ்ரேலுக்கு அல்லது இஸ்ரேலிய வான்வெளி வழியாக விமானங்களை இயக்கும் பல சர்வதேச நிறுவனங்கள் பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி துபாயிலிருந்து டெல் அவிவ் சென்ற ஃபிளை துபாய் விமானத்தை ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை பைலட் ஒருவர் கடத்தி, பென் குரியன் விமான நிலையத்தில் மோதச் செய்ய முயன்றதாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தச் சம்பவத்தின் எதிரொலியாகவே இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















