Home மாவட்டங்கள் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அம்மா உணவகம்

ஓமந்தூரார் மருத்துவமனையில் அம்மா உணவகம்

சென்னை, செப். 26-
சென்னை ஓமந்தூரார் அரசு பல் நோக்கு மருத்துவமனையில் அம்மா உணவகம் அமைக்க மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜி.எஸ்.சமீரன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் மேயர் பிரியா பேசியதாவது: சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கண்ணியக் குறைவாக விமர்சித்த முதல்-அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற 4 மாதங்களில் மாநிலம் முழுவதும் குற்றச் சம்பவங்கள், கொலைகள், பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன. சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், ஏழை, எளிய மக்களைப் பெரிதும் பாதிக்கும் விலைவாசி உயர்வு, ஆவின் பால் தட்டுப்பாடு, மின் கட்டண உயர்வு, இரவு நேரங்களில் மின்வெட்டால் தூக்கமின்றி தவிக்கும் மக்கள் என நிர்வாகச் சீர்கேட்டால் தமிழகம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்வது, மீனம்பாக்கம் விமான நிலையத்தைத் தனியாருக்கு தாரைவார்க்க பிரதமரை வலியுறுத்துவது போன்ற எண்ணற்ற தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருவது கண்டிக்கத்தக்கது என்றார். அவையில் அம்பேத்கர் படம் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு விசிக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விசிக, திமுக கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, “இந்த மாமன்றத்தில் அம்பேத்கர் படம் வைக்கப்பட்டதே திமுக ஆட்சியில்தான். அம்பேத்கரை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அவர் அனைவருக்குமானவர்” என்றார். இதையடுத்து விசிக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.