Home செய்திகள் தேசிய செய்திகள் காளி கோயிலின் ரூ.100 கோடி ஆபரண பெட்டக சாவி காணவில்லை

காளி கோயிலின் ரூ.100 கோடி ஆபரண பெட்டக சாவி காணவில்லை

கொல்கத்தா: செப். 9-
கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற காளிகாட் கோயில் சமீபத்தில் சர்ச்சையின் மையமாகியுள்ளது. பார்வதி தேவியின் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் இக் கோயில், பாரம்பரியத்துடன் கூடிய தங்க நகைகளைக் கொண்டுள்ளது. இந்த நகைகள், பல நூறு ஆண்டுகளாக பக்தர்களால் தானமாக வழங்கப்பட்டவை.
இந்த ஆபரணங்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் அரசு வங்கியின் லாக்கரில் பாதுகாக்கப்பட்டிருந்தாலும், அதன் சாவி 1980ம் ஆண்டிலிருந்து காணாமல் போய்விட்டதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, அப்பகுதியின் பழமையான நிலப்பிரபுக்கள் குடும்பத்தில் முக்கியமானவர் சபர்னா ராய் சவுத்ரி கொல்கத்தா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கோயிலின் சொத்துக்களையும் ஆபரணங்களையும் பாதுகாப்பதற்காகவே இந்த பெட்டகம் உருவாக்கப்பட்டதாகவும், கடந்த 46 ஆண்டுகளாக அதன் சாவி காணவில்லை என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அம்மனுக்கு சொந்தமான விலையுயர்ந்த ஆபரணங்கள் எங்கே உள்ளன என்பதில் ஆழ்ந்த கவலை எழுந்துள்ளது. மேலும், ரூ.1,000 கோடிக்கும் அதிகமான நிதி முறைகேடுகள், மோசடிகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால், இந்த விவகாரத்தை விசாரித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.