
பெங்களூர், செப். 3- கிருஷ்ணன் என்றால் வெறும் கடவுள் மட்டுமல்ல; ஆருயிர் நண்பன், காக்கும் தலைவன், துன்பங்களில் இருந்து விடுவிக்கும் இரட்சகன். கிருஷ்ணனின் இந்த நற்குணங்கள் அனைத்தும் குழந்தைகளிடமும் நிறைய வேண்டும் என்ற நோக்கில், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணன் மற்றும் ராதை வேடமிட்டு அழகு பார்க்கின்றனர். அதன்படி, பெங்களூரு வித்யாரண்யபுரத்தைச் சேர்ந்த திலீப் குமார் – அருணா சிறகுப்பி தம்பதியின் மகன் லிஷான், வண்ணமயமான கிருஷ்ணன் வேடத்தில் படுசுட்டியாகக் காட்சிளிக்கிறான். அதேபோல், பிரதீப் என்பவரின் மகள் தேவான்ஷி, குறும்புத்தனம் நிறைந்த ராதையாக வேடமிட்டு அசத்துகிறாள். அகில உலகத்தையும் இயக்கும் ஸ்ரீகிருஷ்ணன், பௌர்ணமி நிலவொளியில் புல்லாங்குழல் இசைத்து ராதையுடன் அன்பைப் பொழிந்தவர். இந்தச் குட்டிச் செல்லங்களின் கொஞ்சும் எழில், அந்த அழியாத கிருஷ்ண-ராதை பிரேம லோகத்தையே பூமிக்குக் கொண்டுவந்தது போல் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.













