
சென்னை, நவ. 5-
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன், 16 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் கூவம் குடிசைப்பகுதி மக்களுக்காக குரல் கொடுத்தவர் என்பது தெரியவந்துள்ளது. 45 வயதான அவர், கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முதல் இந்திய வம்சாவளி மேயர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்.ஐ.டி.) நகர்ப்புறத் திட்டமிடல் துறையில் முதுகலைப் பட்டமும் நித்யா ராமன் பெற்றுள்ளார். 2010 முதல் 2013-ம் ஆண்டு வரை சென்னையில் செயல்பட்ட ‘சென்டர் பார் டெவலப்மென்ட் பைனான்ஸ்’ அமைப்பின் ‘டிரான்ஸ்பரன்ட் சென்னை’ களப்பணிக்கு அவர் தலைமை தாங்கினார்.
சென்னையின் குடிசைப்பகுதிகளில் பொது சுகாதாரம் மற்றும் கழிப்பறை வசதிகள் குறித்த ஆய்வை அந்த அமைப்பு மேற்கொண்டது. நித்யா ராமனும், அவரது குழுவினரும் ஜி.பி.எஸ். கருவிகள் மற்றும் குறிப்பேடுகளுடன் களப்பணியில் ஈடுபட்டனர். குடிசைப்பகுதிகளுக்குச் சென்ற அவர், அங்குள்ள பொதுக் கழிப்பறைகளை நேரில் பார்வையிட்டார். சென்னையில் குப்பைகளைச் சேகரிக்கும் தூய்மைப் பணியாளர்களின் தரவுகளையும் அவர் திரட்டினார். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தினார். சென்னையின் நீர்வழிகள், குறிப்பாக கூவம் ஆற்றங்கரையோரக் குடிசைப்பகுதிகளை அரசு தீவிரமாக அகற்றத் தொடங்கியபோது, நித்யா ராமன் ஏழை மக்களுக்கு ஆதரவாக நின்றார். அவர்களை வெகுதொலைவில் உள்ள குடியிருப்புகளுக்கு இடமாற்றம் செய்வதற்கு எதிராகக் குரல் கொடுத்தார். அடிப்படை வசதிகள் இன்றி மேற்கொள்ளப்படும் இத்தகைய வெளியேற்றங்கள், மக்களின் வாழ்வாதாரத்தையே பறித்துவிடும் என அரசிடம் சுட்டிக்காட்டினார்.













