
சென்னை: நவ. 7-
தமிழகத்தில் நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களின் வணிக வீதிகளில் புத்தாடை, பட்டாசு, இனிப்புகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
தீபாவளியை முன்னிட்டு சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் செயல்படும் துணிக் கடைகளில் பல்வேறு வகையான புத்தாடைகள் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. பொதுமக்களில் பலர் கடந்த வார சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஓரளவு புத்தாடைகள் மற்றும் பட்டாசுகளை வாங்கி வைத்திருந்தனர்.
நேற்று சொந்த ஊர்களுக்குப் புறப்படத் திட்டமிட்டிருந்த நிலையில், காலை முதலே துணிக்கடைகள் மற்றும் பட்டாசுக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக, இனிப்புக் கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.
சென்னை மற்றும் புறநகரின் முக்கிய வர்த்தகப் பகுதிகளான தியாகராய நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பிராட்வே, குரோம்பேட்டை, பள்ளிக்கரணை ஆகிய இடங்களில் சாலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் தீபாவளி ஜவுளி விற்பனை களைகட்டியது.
மதுரை விளக்குத்தூண், தெற்குமாசி வீதி, கோவை டவுன்ஹால், காந்திபுரம், கிராஸ்கட் சாலை, ஒப்பணக்கார வீதி, திருச்சி என்எஸ்பி சாலை, பெரியகடை வீதி, திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலைச் சுற்றியுள்ள மாடவீதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனையும் களைகட்டியது. இனிப்புக் கடைகளில் பல்வேறு வகையான இனிப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஹோட்டல்களிலும் கூட்டம் அதிகரித்ததால், பொதுமக்கள் காத்திருந்து உணவருந்தினர். முக்கிய பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.













