
அனந்தபூர், அக். 17-
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் துர்காபேட்டையைச் சேர்ந்தவர் காயத்ரி (50).
இவரது மகள் அஸ்வினிக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு அஸ்வினி, தனது கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்தார்.
தசரா விடுமுறையையொட்டி அஸ்வினி தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார். இந்நிலையில், காயத்ரி, அவரது மகள் அஸ்வினி மற்றும் காயத்ரியின் நெருங்கிய தோழிகள் உள்ளிட்ட 5 பெண்கள் கொல்லப்பல்லி அணைக்கு சென்றனர். அங்கு அவர்கள் அனைவரும் அணையில் இறங்கியதாகக் கூறப்படுகிறது. அணையில் ஆழம் அதிகமாக இருந்ததால், 5 பேரும் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கினர்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். நீரில் தேடுதல் நடத்தி, 5 பேரையும் சடலங்களாக மீட்டனர்.














