Home செய்திகள் தேசிய செய்திகள் வர்த்தகம் பாதித்தால் தலையிடுவோம்: உச்சநீதிமன்றம்

வர்த்தகம் பாதித்தால் தலையிடுவோம்: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி, அக். 17-
போராட்டங்கள் மற்றும் அதனால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டால், அந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடும் என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார். அதேவேளையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தும் போராட்டத்துக்கு உடனடியாகத் தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். பண்டிகைக் கால வர்த்தகம் போராட்டங்களால் பாதிக்கப்படுவதாகக் கூறி, டெல்லி வணிகர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய் மால்யா பக்ஷி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. வணிகர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தெகத்ராய், “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் அறிவித்துள்ள நிலையில், என்.டி.எம்.சி. பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, ‘கன்னாட் பிளேஸ்’ பகுதியில் கடைகளைத் திறக்கக்கூடாது என திடீரென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சென்ட்ரல் பூங்காவும் மூடப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சுமார் ரூ.250 கோடி அளவுக்கு வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, போராட்டத்துக்குத் தடை விதித்து உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்” என்று வாதிட்டார்.இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: போராட்டம் மற்றும் கட்டுப்பாடுகளால் வணிகர்கள், சிறு வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. இது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். அதே நேரத்தில், போராடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், அது அரசியல் சாசன உரிமை என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மற்றொரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். போராட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று இன்னொரு தரப்பினர் கோருகின்றனர். எனவே, அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பின்னரே முடிவு எடுக்கப்படும். தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளால் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டால், உச்சநீதிமன்றம் தலையிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இவ்வழக்கில் தற்போது இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி, விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.