
சென்னை: செப். 26-
கோவை மாவட்ட இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட 5 பேரில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சென்னை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முதல் குற்றவாளியான சையது அபுதாஹிர் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டார்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சசிகுமார் (37), இந்து முன்னணி கோவை மாநகர மாவட்ட செய்தித் தொடர்பாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இரவு, அமைப்புப் பணிகளை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சுப்ரமணியம்பாளையம் பகுதியில் சென்றபோது, வழிமறித்த மர்ம நபர்கள் அவரை வெட்டிக் கொலை செய்தனர்.இதையடுத்து கோவையில் பதற்றமும் வன்முறைச் சம்பவங்களும் ஏற்பட்டன. பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. போலீஸார் நடத்திய விசாரணையில், எஸ்டிபிஐ கொடிக்கம்பம் நடப்பட்டபோது ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து இந்தக் கொலை நடந்தது தெரியவந்தது.துடியலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். குற்றவாளிகளைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டபோதும், கொலையாளிகள் தொடர்பாக நேரடி ஆதாரங்கள் கிடைக்கவில்லை. பின்னர் வழக்கு சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. தொடர் விசாரணையின் முடிவில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்குத் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்ததாக என்ஐஏ தெரிவித்தது. சையது அபுதாஹிர், சதாம் உசேன், சுபைர், முகமது முபாரக், முகமது ரபிகுல் ஹசன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் கொலை நடந்ததாக அதில் குற்றம் சாட்டப்பட்டது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர்விழி வழங்கிய தீர்ப்பில், சதாம் உசேன் (29), சுபைர் (36), முகமது முபாரக் (36), முகமது ரபிகுல் ஹசன் (35) ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.30,000 அபராதமும் விதிக்கப்பட்டது. தீர்ப்புக்குப் பிறகு அவர்கள் பலத்த பாதுகாப்புடன் புழல் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.













