Home செய்திகள் உலக செய்திகள் சவுதி விமான நிலையங்கள் மீது ஹவுதி தாக்குதல்

சவுதி விமான நிலையங்கள் மீது ஹவுதி தாக்குதல்

ரியாத், அக். 8- சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்களான ரியாத் மற்றும் அபாவில் உள்ள விமான நிலையங்களை குறிவைத்து ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்; 36 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏமனில் அரசுக்கு எதிராகப் போரிட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவை குறிவைத்து அடிக்கடி டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சவுதி தலைநகர் ரியாத் மற்றும் நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள அபா சர்வதேச விமான நிலையங்களை குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகளை ஏந்திய டிரோன்கள் மூலம் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் விமான நிலைய வளாகத்தில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், பயணிகள் மற்றும் விமான நிலையப் பணியாளர்கள் உட்பட 36 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையங்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர். இதையடுத்து, சவுதி பாதுகாப்புப் படைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. மேலும், விமானத் தாக்குதல்களைத் தடுக்கும் வான்வழிப் பாதுகாப்பு அமைப்புகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் விமான நிலையங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.