Home மாவட்டங்கள் சென்னை சாலமன் பாப்பையா மறைவு: ஆளுநர்,முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

சாலமன் பாப்பையா மறைவு: ஆளுநர்,முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

சென்னை, செப். 12- பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவுக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர், முதல்வர் விஜய், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “சாலமன் பாப்பையா மறைந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். சிறப்பான பேச்சாற்றல், நகைச்சுவை உணர்வு, ஆழ்ந்த தமிழ் அறிவின் மூலம் பொதுமக்களின் சிந்தனையை வளப்படுத்தியதுடன், தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் சிறப்பை பல தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு” என்றார்.முதல்வர் விஜய் கூறுகையில், தமிழின் பெருமையையும் தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா, நகைச்சுவை கலந்த பேச்சாலும் ஆழ்ந்த தமிழ் புலமையாலும் சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் என்றார். பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல்,
சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் அவரது பங்கு மகத்தானது என்றும், அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகுக்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு என்றும் குறிப்பிட்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடு தமிழர்களுக்குத் தொடங்கும் அளவுக்கு அவர் அன்றாட வாழ்வுடன் இரண்டறக் கலந்தவர் என்றும், பட்டிமன்றம் என்றாலே பாப்பையாதான் என்றும் கூறினார். மதுரையின் பெருமைமிகு அடையாளமாக மாறிய பாப்பையாவை இழந்ததை மனம் ஏற்க மறுப்பதாகவும், தமிழ்த்தாய் தனது அரும்புதல்வர்களுள் ஒருவரை இழந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.