
அகமதாபாத்: நவ. 17-
குஜராத்தின் அம்பர்டி சஃபாரி பூங்காவில் சிங்கத்தை வனத்துறை ஊழியர்கள் பைக்குகள் மற்றும் எஸ்யூவி வாகனம் மூலம் விரட்டிச் சென்றதாகக் கூறப்படும் காணொளி இணையத்தில் வைரலானது. இதையடுத்து, சிங்கத்தைத் துன்புறுத்தும் நோக்கில் ஊழியர்கள் செயல்படவில்லை என்றும், அது மீண்டும் கூண்டுப் பகுதிக்குத் திரும்பும் வகையில் வழிநடத்தவே முயன்றதாகவும் வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.தீபாவளி விடுமுறையையொட்டி அம்பர்டி சஃபாரி பூங்காவுக்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். மாலை நேரத்தில் சிங்கங்கள் தங்களுக்கான கூண்டுப் பகுதிக்குத் திரும்ப வேண்டும். ஆனால், ஒரு சிங்கம் கூண்டை நோக்கிச் செல்லாமல் வேறு திசையில் நகரத் தொடங்கியது. இதையடுத்து, அதைத் தடுத்து மீண்டும் கூண்டுப் பகுதிக்கு வழிநடத்த ஊழியர்கள் தலையிட்டனர். அப்போது எடுக்கப்பட்ட காணொளியே தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு வன உயிரின ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிங்கத்தை இவ்வாறு விரட்ட வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்














