
வாஷிங்டன்: நவ. 17-
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் டர்ட்டி பாம் அல்லது ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி, டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளதாகக் கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா–ஈரான் இடையே நேரடி தாக்குதல் நடைபெறாதபோதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது. வாஷிங்டனில் பெரிய தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக டர்ட்டி பாம் அல்லது ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் திட்டம் தொடர்பாக அமெரிக்க உளவுத்துறை கூடுதல் தகவல்களைச் சேகரித்து வருகிறது. அதேநேரத்தில், அமெரிக்க அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வெடிகுண்டு தயாரிக்கத் தேவையான பொருட்கள் ஏற்கெனவே அமெரிக்காவுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. அணுசக்தி தொடர்பான பொருட்கள் அல்லது ரசாயனங்களை ஈரான் கொண்டு வரக்கூடும் என்றும் சில அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.“அனைத்து அச்சுறுத்தல்களையும் அமெரிக்கா கண்காணித்து வருகிறது. இருப்பினும், தற்போது அமெரிக்காவுக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை” என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் லாரன் பிஸ் தெரிவித்துள்ளார்.டர்ட்டி பாம் என்பது அணு ஆயுதம் அல்ல. சாதாரண வெடிபொருட்களுடன் கதிரியக்கப் பொருட்கள் இணைக்கப்பட்டு இது தயாரிக்கப்படுகிறது. வெடிப்பின்போது கதிரியக்கப் பொருட்கள் சுற்றுப்புறத்தில் பரவக்கூடும்.இதன் பரவல் சில கிலோமீட்டர் தொலைவுக்குள் மட்டுப்படக்கூடும் என்றாலும், வெடிப்பால் ஏற்படும் பாதிப்புகளே அதிக உயிரிழப்புகளுக்கு காரணமாக இருக்கலாம். மேலும், இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தும்.
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்தினர் மீதும் ஈரான் ரசாயனத் தாக்குதல் நடத்தக்கூடும் என தனியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையும் அமெரிக்கா கண்காணித்து வருகிறது. ஈரான் தூதரகம் குற்றச்சாட்டுகளை மறுத்து, ரசாயன ஆயுதப் பயன்பாட்டை ஈரான் சட்டவிரோதமானதாகக் கருதுவதாக தெரிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை.
















