Home மாவட்டங்கள் சென்னை கடற்கரை மணல் கலப்பு புகார்: 15 யார்டுகளுக்கு சீல்

கடற்கரை மணல் கலப்பு புகார்: 15 யார்டுகளுக்கு சீல்

செங்குன்றம்: நவ. 17-
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் மற்றும் அதை ஒட்டியுள்ள புழல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகள், சென்னை அருகேயுள்ள பகுதிகளாகும். இப்பகுதிகளில் தொடர்ந்து புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
செங்குன்றம் அருகே புழல் ஊராட்சிக்கு உட்பட்ட புதுநகர், ஆருண் உல்லாச நகர் பகுதிகளில் பல்வேறு மணல் யார்டுகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பழவேற்காடு மற்றும் காட்டுப்பள்ளி கடற்கரைப் பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக கடற்கரை மணலை எடுத்து வந்து, தரம் குறைந்த
ஆற்று மணலுடன் கலந்து விற்பனை செய்வதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்பட்டு வந்தது.இந்தப் புகாரைத் தொடர்ந்து, கனிம வளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு நேற்று புழல் ஊராட்சிக்கு உட்பட்ட புதுநகர், ஆருண் உல்லாச நகர் பகுதிகளில் செயல்பட்டு வரும் சில மணல் யார்டுகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின்போது, காட்டுப்பள்ளி பகுதியில் இருந்து உரிய அனுமதியின்றி கடற்கரை மணல் எடுத்து வரப்பட்டு, மிகப்பெரிய அளவில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்தக் கடற்கரை மணல் தரம் குறைந்த ஆற்று மணலுடன் கலந்து விற்பனை செய்யப்பட்டதும் ஆய்வில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதையடுத்து, அமைச்சரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். கலப்பட மணல் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் 15 மணல் யார்டுகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. சம்பவம் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கடற்கரைப் பகுதிகளில் இருந்து அனுமதியின்றி மணல் எடுத்து வரப்பட்டதா, அது எவ்வளவு காலமாக யார்டுகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது என்பது தொடர்பாகவும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.