
பெய்ஜிங்: மே 14-
எலியும் பூனையுமாக இருந்த அமெரிக்கா-சீனா தற்போது பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்திருக்கின்றன. அந்த வகையில் இன்று சீனாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த பயணத்தில் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று சொல்லப்படுகிறது.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் பயணமாக சீனாவுக்குச் சென்றுள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க அதிபர் ஒருவர் சீனாவுக்குச் செல்வது இதுவே முதல் முறை. பெய்ஜிங்கில் உள்ள ‘கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்’ மாளிகையில் ஷி ஜின்பிங் ட்ரம்ப்பிற்குச் சிறப்பான வரவேற்பு அளித்தார்.
இந்தச் சந்திப்பில் உலக நாடுகளைப் பாதிக்கும் பல முக்கியமான விவகாரங்கள் விவாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடந்த ஆண்டு நிலவிய வர்த்தகப் போரைத் தவிர்க்கவும், அமெரிக்க விவசாயப் பொருட்கள் மற்றும் போயிங் விமானங்களைச் சீனா வாங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அதேபோல தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வதைச் சீனா எதிர்க்கிறது. இது குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கின்றனர். இதுதவிர, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மற்றும் ஈரான் போர் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதிப்பது குறித்தும், இதில் சீனாவின் தலையீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் செமிகண்டக்டர் சிப்கள் தயாரிப்பில் உள்ள போட்டிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. எலான் மஸ்க் மற்றும் என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங் ஆகியோரும் ட்ரம்ப்புடன் சீனா சென்றுள்ளனர். எனவே இந்த பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மறுபுறம், தமக்கும் ஷி ஜின்பிங்கிற்கும் இடையே நல்ல நட்பு இருப்பதாகவும், சீனா தனது சந்தையை அமெரிக்க நிறுவனங்களுக்குத் திறந்துவிட வேண்டும் என்றும் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், சீனா இந்த விஷயத்தில் ரொம்பவும் கறார் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


















