Home செய்திகள் தேசிய செய்திகள் சுபாஷ் கபூரை ஜெர்மனிக்கு அனுப்ப இடைக்கால தடை

சுபாஷ் கபூரை ஜெர்மனிக்கு அனுப்ப இடைக்கால தடை

புதுடெல்லி, அக். 28-
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள சுத்தமல்லி வரதராஜப் பெருமாள் கோயில் சிலைகள் திருட்டு வழக்கில் சுபாஷ் சந்திர கபூருக்கு கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அவரது தண்டனைக் காலம் கடந்த 2022 அக்டோபரில் நிறைவடைந்தது. இந்நிலையில், தண்டனைக் காலம் முடிந்த பிறகும் தன்னை சிறையில் வைத்திருப்பதாகக் கூறிய சுபாஷ் சந்திர கபூர், தன்னை ஜெர்மனிக்கு திருப்பி அனுப்ப உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, சுபாஷ் கபூரை ஜெர்மனிக்கு திருப்பி அனுப்ப உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து விஜயநாராயணன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பாக மத்திய அரசு, தமிழக அரசு, தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறை மற்றும் சுபாஷ் கபூர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், சுபாஷ் கபூரை ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.