
சென்னை: செப். 26-
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி (84) தொடர்பான பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க, 4 பெண் போலீஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அமைத்துள்ளார்.
ஏழை சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்ட வீரமணி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி, அவரது உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் மற்றும் மற்றொரு உதவியாளர் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வீரமணி சிறுமிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
வீரமணி சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்வதை சாந்தி தரப்பினர் ரகசியமாக வீடியோ பதிவு செய்து, அதைக் காண்பித்து அவரிடம் கோடிக்கணக்கில் பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வீடியோக்கள் பலரிடம் பரவியதையடுத்து, பலரும் வீரமணியை மிரட்டி பணம் பெற்றதாகவும், இதன் பின்னணியில் பெரும் கும்பல் இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து 2024-ம் ஆண்டே சென்னை போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் குற்றம்சாட்டியிருந்தார்.
வழக்கு விசாரணையில் சுணக்கம் காட்டியதாகக் கூறி போலீஸ் அதிகாரிகள் அருண், கண்ணன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். போலீஸ் காவலில் உள்ள சாந்தி, மகேந்திர சிம்கன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், தேனாம்பேட்டையில் உள்ள அவர்களது வீட்டிலும் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, வீரமணி தொடர்பான மேலும் சில ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. எஸ்ஐடி குழுவில் பி.சி. தேன்மொழி, திஷா மிட்டல், ஜெ.முத்தரசி, வி.வி.கீதாஞ்சலி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். குற்றச்சாட்டுக்குள்ளானவர்களுக்கு சம்மன் அனுப்பி, வாக்குமூலங்களை வீடியோவாகப் பதிவு செய்யவும், சம்பவ இடங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் தகவல் திரட்டவும் குழு திட்டமிட்டுள்ளது. வீரமணியிடமும், சாந்தி, மகேந்திர சிம்கன், கணேசன் ஆகியோரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி, பின்னர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. ரஞ்சன் குமாரிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.













