Home செய்திகள் உலக செய்திகள் ஜெர்மனியில் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பிஎம்டபுள்யூ நிறுவனம்

ஜெர்மனியில் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பிஎம்டபுள்யூ நிறுவனம்

பெர்லின், ஜூலை 30- 2027ம் ஆண்டுக்குள் ஜெர்மனியில் சுமார் 8000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபுள்யூ அறிவித்துள்ளது. மின்சார வாகனங்களுக்கான அதிக செலவு, சீனாவுடனான கடுமையான போட்டி மற்றும் அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு போன்றவற்றால் ஜெர்மனியின் வாகன உற்பத்தித் துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இதன் காரணமாக பிரபல முன்னணி கார் நிறுவனங்களான வோக்ஸ்வேகன், மெர்சிடீஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே ஊழியர்களைக் குறைப்பதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. இந்த நிலையில், 2027ம் ஆண்டுக்குள் ஜெர்மனியில் சுமார் 8000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக பிஎம்டபுள்யூ அறிவித்துள்ளது. முனிச் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது உலகம் முழுவதும் சுமார் 1,50,000 பேர் பணிபுரிகின்றனர்.தற்போது, பிஎம்டபுள்யூ நிறுவனத்திற்கும், தொழிலாளர் நலச்சங்கத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, நிர்வாகம் மற்றும் ஆராய்ச்சி-மேம்பாட்டு பிரிவுகளை இலக்காகக் கொண்டு, இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டதாகவும், உற்பத்திப் பிரிவுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது இரண்டாம் காலாண்டு நிதி நிலை அறிக்கையை இன்று வெளியிடத் திட்டமிட்டுள்ளது.