
வாஷிங்டன், செப். 17- ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போரால் கடந்த 5 மாதங்களில் மட்டும் அமெரிக்க ராணுவத்துக்கு ரூ.3.65 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, ஈரான் இடையிலான போரின் பாதிப்புகள் குறித்து அமெரிக்க நாடாளுமன்ற பட்ஜெட் அலுவலகம் (சிபிஓ) ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்க ராணுவம் அதிநவீன ஏவுகணைகள், வெடிகுண்டுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட தாக்குதலுக்கு மட்டும் 50-க்கும் மேற்பட்ட டோமாஹாக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரு டோமாஹாக் ஏவுகணையின் விலை 3.64 மில்லியன் டாலர் (ரூ.30.6 கோடி) ஆகும். ட்ரோன்களுக்காகவும், சைபர் பாதுகாப்பு மற்றும் உளவு பணிகளுக்காகவும் பெரும் தொகை செலவிடப்பட்டுள்ளது.ஈரான் தாக்குதல்களில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவக் கட்டமைப்புகள், ஆயுதக் கட்டமைப்புகள் அழிந்துள்ளன. இவற்றைச் சீரமைக்கவும் பெரும் தொகை செலவிடப்பட்டுள்ளது. ஈரான் போரில் சுமார் 340-க்கும் மேற்பட்ட அமெரிக்க போர் விமானங்கள் ஈடுபட்டுள்ளன. ஏராளமான போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கில் முகாமிட்டுள்ளன. போருக்காக புதிய ஏவுகணைகள், வெடிகுண்டுகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 5 மாதங்களில் ஏற்பட்ட ரூ.3.65 லட்சம் கோடி இழப்பு, ஏவுகணைகள், ட்ரோன்கள், சைபர் பாதுகாப்பு, உளவு பணிகள், விமானங்கள், போர்க்கப்பல்கள், புதிய ஆயுதக் கொள்முதல் மற்றும் சேதமடைந்த கட்டமைப்புகளைச் சீரமைத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.














