Home மாவட்டங்கள் சென்னை தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிமுறைகேடு: முன்னாள் அமைச்சர் மகேஷ் ஆஜர்

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிமுறைகேடு: முன்னாள் அமைச்சர் மகேஷ் ஆஜர்

சென்னை: செப்.18 –
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் மகேஷ், இன்று (செப். 18) போலீசார் முன்னிலையில் விசாரணைக்காக ஆஜரானார்.
கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல் மற்றும் கட்டுமான அனுமதி பெறுதல் ஆகியவற்றில், ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் அரசகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகுமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுடன் தொடர்புடைய இடங்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகளைச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, பல்வேறு ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். அந்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராகப் பதவி வகித்த மகேஷுக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, மகேஷுக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகம், அவரது உதவியாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்தச் சோதனைகளில், சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், காசோலைகள், 18 மொபைல் போன்கள், 3 மடிக்கணினிகள், 8 பென்டிரைவ்கள், 2 மானிட்டர்கள் உள்ளிட்ட மொத்தம் 118 ஆவணங்கள் மற்றும் பொருட்களை போலீசார் கைப்பற்றினர். அவற்றைத் தொடர்ந்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.