Home சினிமா தமிழகத்தில் 17 மாவட்டங்களில்இன்று மிதமான மழை

தமிழகத்தில் 17 மாவட்டங்களில்இன்று மிதமான மழை

சென்னை: நவ.7-
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய கேரளப் பகுதிகளில் இருந்து தெற்கு உள் கர்நாடகம் வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (சனிக்கிழமை) மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய 17 மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, வருகிற 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பின்னர், வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.