
சென்னை, செப். 23- தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி விதிக்க வழிவகை செய்யும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரிச் சட்டம், 2006-ல் 3-ஏ என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய பிரிவின் மூலம் மதுபான விற்பனையின் மீது சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி விதிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.ஒரு மதுபான பாட்டிலுக்கு அதிகபட்சமாக ரூ.20 வரை இந்த வரியை விதிக்க முடியும். எந்த வகையான மதுபானத்துக்கு எவ்வளவு வரி விதிக்க வேண்டும் என்பதை தமிழக அரசு அறிவிப்பு மூலம் நிர்ணயிக்கலாம். மேலும், மதுபானங்களின் வகைகளுக்கு ஏற்பவும், வெவ்வேறு அளவுகளில் விற்பனை செய்யப்படும் பாட்டில்களுக்கு ஏற்பவும் தனித்தனி வரி விகிதங்களை நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரி மூலம் கிடைக்கும் தொகையை மதுபான பாட்டில்களை மறுசுழற்சி செய்தல், அவற்றைப் பாதுகாப்பாக அகற்றுதல் மற்றும் மீண்டும் பயன்படுத்துதல் போன்ற பணிகளுக்குச் செலவிடலாம். மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டங்களைச் செயல்படுத்தவும், மதுப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான திட்டங்களை மேற்கொள்ளவும் இந்த நிதியைப் பயன்படுத்தலாம். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்குதல், மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்துதல் ஆகிய பணிகளுக்கும் இந்தத் தொகையை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாத்தல், அவற்றை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பணிகளுக்கும், சமூக நலனுடன் தொடர்புடைய பிற நடவடிக்கைகளுக்கும் இந்த வருவாயைச் செலவிட முடியும். இதனால், தமிழக அரசு விரைவில் மதுபான பாட்டில்களின் விலையை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.













