
சென்னை: நவ. 13-
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன் படி, தமிழகம் முழுவதும் தற்போது 5.77 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல்கள் நேற்று வெளியிடப்பட்டன.
சென்னையில் மாவட்டதேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான ஜி.எஸ்.சமீரன் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதில், தமிழகத்தில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 82 லட்சத்து 3,992 பேர், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 95 லட்சத்து 34,734 பேர், 3-ம் பாலினத்தவர்கள் 7,892 பேர் என மொத்தம் 5 கோடியே 77 லட்சத்து 46,618 பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போதுதமிழகத்தில் 5 கோடியே 73லட்சத்து 43,291 வாக்காளர்கள் இருந்தனர். அதன் பிறகு 4 லட்சத்து 3,327 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 77 லட்சத்து 46,618 வாக்காளர்கள் இடம்பெற்றனர். அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 32 லட்சத்து 39,301 வாக்காளர்கள், சென்னை மாவட்டத்தில் 29 லட்சத்து 14,908 வாக்காளர்கள், சேலம் மாவட்டத்தில் 27 லட்சத்து 95,315 வாக்காளர்கள், கோவை மாவட்டத்தில் மொத்தம் 27 லட்சத்து 68,820 வாக்காளர்கள் உள்ளனர்.குறைவான வாக்காளர்களை கொண்ட மாவட்டமாக அரியலூர் (5,29,528) உள்ளது தொகுதிகள் அடிப்படையில் சோழிங்கநல்லூர் (5,58,729), ஆவடி (4,39,953), மாதவரம் (4,37,465) ஆகியவை அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதிகளாகவும், துறைமுகம் (1,20,852), எழும்பூர் (1,39,732), வில்லிவாக்கம் (1,64,527) ஆகியவை குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளாகவும் உள்ளன.













