Home செய்திகள் தேசிய செய்திகள் காதலனை கொல்ல முயன்றதாக இளம்பெண் உள்பட 5 பேர் கைது

காதலனை கொல்ல முயன்றதாக இளம்பெண் உள்பட 5 பேர் கைது

பாலக்காடு: நவ. 13-கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகே பெருமொடியூர் பனங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஷபானா (19). அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது வாலிபருடன் அவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், காதலன் தன்னை சுதந்திரமாக இருக்க அனுமதிக்காமல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வந்ததால், ஷபானா கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஷபானா, தனது தோழியான நாதியா (20) என்பவரைச் சந்தித்து, காதலனை கொலை செய்ய உதவுமாறு கேட்டுள்ளார். இதன்பேரில் நாதியாவும், அவரது நண்பர்களான ரபிபா (25), இர்ஷாத் (28), அசாருதீன் (25) ஆகியோரும் ஷபானாவுக்கு உதவ முன்வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஷபானாவை அழைத்துச் செல்வதற்காக அவரது காதலன் காரில் வந்துள்ளார். அப்போது, ஷபானா உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல், காருக்குள் வைத்தே அந்த வாலிபரையும், அவருடன் வந்திருந்த நண்பரையும் கடுமையாக தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பின்னர், நள்ளிரவு நேரத்தில் தாழே பாலம் சாலையில் காதலனை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு, அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், படுகாயமடைந்த காதலனையும் அவரது நண்பரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், காதலன் தன்னை சுதந்திரமாக இருக்க விடாமல் பல கட்டுப்பாடுகளை விதித்து வந்ததால், அவரை கொலை செய்ய ஷபானா தனது நண்பர்கள் 4 பேரின் உதவியை நாடியதாக தெரியவந்தது.
இதையடுத்து ஷபானா, நாதியா, ரபிபா, இர்ஷாத், அசாருதீன் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.