
சண்டிகர், செப். 27-
சண்டிகர் காவல் துறை தலைமையகத்தின் கணக்குப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த நிதின் சிங், தனது அரசு குடியிருப்பில் தலையில் குண்டுக் காயங்களுடன் நேற்று முன்தினம் காலை சடலமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நாட்டுத் துப்பாக்கியைக் கைப்பற்றினர். இந்தச் சம்பவம் தொடர்பாக நிதின் சிங்கின் மகன் அர்மானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸார் கூறியதாவது: நிதின் சிங்கின் 18 வயது மகன் அர்மான், தனது காதலியை உடனடியாகத் திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் தொடர்ந்து தகராறு செய்துள்ளார். ஆனால், ஆண்களுக்கான திருமண வயது 21 என்பதால், அதுவரை காத்திருக்குமாறு பெற்றோர் அவரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அர்மான், கடந்த வியாழக்கிழமை மாலை திருமணத்துக்காக ரூ.10 லட்சம் வழங்குமாறு பெற்றோரிடம் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால், பணம் தர பெற்றோர் மறுத்துள்ளனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலையில் அர்மான் நாட்டுத் துப்பாக்கியால் தனது தந்தை நிதின் சிங்கை சுட்டுக் கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தந்தையைச் சுட்டுக் கொன்றதுடன், தனது தாயின் கழுத்தை நெரிக்கவும் அர்மான் முயன்றதாக போலீஸார் தெரிவித்தனர். அவரிடமிருந்து தப்பிய நிதினின் மனைவி கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டதுடன், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட நாட்டுத் துப்பாக்கியையும் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட அர்மானிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.













