
சென்னை, செப். 23:
சட்டசபை இடைத்தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரவையில் பாமக இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என பாமக அறிவித்ததற்கு, தவெக தரப்பின் வியூக வகுப்பாளர் நடத்திய பேச்சுவார்த்தையும் முக்கிய காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் செளமியா அன்புமணியை அமைச்சரவையில் சேர்ப்பது தொடர்பான பேச்சும் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என பாமக ஏற்கெனவே அறிவித்துள்ளது. அன்புமணியின் இந்த முடிவுக்கு அதிமுக மீதான அதிருப்தி ஒரு காரணமாகக் கூறப்பட்டாலும், வேறு சில காரணங்களும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. தவெக ஆட்சி அமைந்த நாள் முதலே பாமக அக்கட்சியுடன் நெருங்கிய நட்பில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரை அன்புமணி நேரில் சந்தித்துள்ளார். இதேபோல், அன்புமணி, ஜான் ஆரோக்கியசாமி மற்றும் முதல்வர் விஜய் ஆகியோரும் சந்தித்துப் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சட்டசபையிலும் செளமியா அன்புமணிக்கு தவெகவினர் முக்கியத்துவம் அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பாமகவிடம் ஆதரவு கோரியுள்ளன. ஆனால், தவெக தரப்பின் வியூக வகுப்பாளர் ஒருவர் அன்புமணியிடம் நேரடியாகப் பேசி, செளமியா அன்புமணியை அமைச்சராக்க விஜய் விரும்புவதாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. எனவே, தவெகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம் என்றும், அது முதல்வருக்கு அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட காலமாகப் பாமக அதிகாரத்தில் இல்லாததால், அமைச்சரவையில் இணைய அன்புமணி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் தனது பேச்சுகளில் செளமியா அன்புமணியை தொடர்ந்து பாராட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.











