Home மாவட்டங்கள் பெங்களூர் திருமண தகராறு – கணவர் குடும்பத்தை நீதிமன்றத்திற்கு இழுக்கக் கூடாது: ஐகோர்ட்டு

திருமண தகராறு – கணவர் குடும்பத்தை நீதிமன்றத்திற்கு இழுக்கக் கூடாது: ஐகோர்ட்டு

பெங்களூரு, நவ. 12-
திருமண தகராறுகளில் கணவரின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரையும் எந்தவித பாகுபாடுமின்றி வழக்கில் சிக்கவைத்து, போலீஸ் நிலையம் மற்றும் கோர்ட்டுகளுக்கு அலையவிடும் போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கர்நாடக ஐகோர்ட்டு முக்கிய கருத்தை தெரிவித்துள்ளது. குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை மற்றும் கட்டாய கருக்கலைப்பு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்கை ரத்து செய்யக் கோரி கணவர், அவரது தாய் மற்றும் சகோதரி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நாகபிரசன்னா தலைமையிலான தனி நீதிபதி அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மனைவி சுமத்தியுள்ள குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாதபோது, ஆரம்ப கட்டத்திலேயே கணவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சட்டத்தின் பிடியில் சிக்கவைப்பதை நியாயப்படுத்த முடியாது என்று நீதிபதி கூறினார். இதுபோன்ற வழக்குகளில் சட்ட நடைமுறைகளே குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஒருவித தண்டனையாக மாறிவிடக் கூடாது என்றும், கணவரின் உறவினர்கள் என்ற காரணத்திற்காக ஆதாரமின்றி அனைவரையும் குற்றவாளிகளாக சேர்ப்பது சரியல்ல என்றும் ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. மேலும், ஒரு நபரின் தனிப்பட்ட நடத்தை மற்றும் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே விசாரணை நடைபெற வேண்டும் என்றும், இதுபோன்ற வழக்குகளை கையாளும்போது கோர்ட்டுகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார். மனுதாரர்கள் தரப்பு வக்கீலின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கட்டாய கருக்கலைப்பு போன்ற கடுமையான குற்றச்சாட்டுக்கு எந்தவொரு போதிய ஆதாரமும் இல்லாததை சுட்டிக்காட்டி, கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் 8-ந் தேதி இந்த தம்பதியினருக்கு இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு மனைவியின் நடத்தையால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி அடிக்கடி தாக்குவது, தகாத வார்த்தைகளால் திட்டுவது மற்றும் கையில் கிடைக்கும் பொருட்களை வீசி எறிந்து சண்டையிடுவதுமாக இருந்துள்ளார். வயதான தாயாரை வீட்டை விட்டு வெளியேற்றும் நோக்கத்தில் மனைவி இவ்வாறு நடந்து கொள்வதாக கணவர் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக கணவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து, மனைவி தனது நடத்தையை திருத்திக்கொள்ள அறிவுரை வழங்குமாறு கோரியிருந்தார். இதற்கு பதிலடியாக மனைவி, தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை மற்றும் கட்டாய கருக்கலைப்பு ஆகிய குற்றச்சாட்டுகளை சுமத்தி புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா 2023-ன் பிரிவுகள் 85, 115(2), 351(2) மற்றும் 352 ஆகியவற்றின் கீழ் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதனை எதிர்த்து கணவரின் குடும்பத்தினர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பு வக்கீல் வாதிடுகையில், கட்டாய கருக்கலைப்பு நடைபெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்தார். மனைவி எதிர்கொண்ட உடல் மற்றும் மனநலப் பிரச்சினைகளின் பின்னணியில், அவரது சம்மதத்தின் பேரிலேயே மருத்துவ காரணங்களுக்காக 11 வார கரு பாதுகாப்பான மருத்துவ முறை மூலம் கலைக்கப்பட்டது என்றும், இந்த நடைமுறை 1971-ம் ஆண்டின் மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தின் 2021-ம் ஆண்டு திருத்தப்பட்ட விதிகளுக்கு உட்பட்டே மேற்கொள்ளப்பட்டது என்றும் நீதிபதியிடம் விளக்கமளிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த ஐகோர்ட்டு, வழக்கின் அம்சங்கள் மற்றும் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களை ஆய்வு செய்து கிரிமினல் வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டது.