Home மாவட்டங்கள் சென்னை திருமாவளவனுக்கு பாடமா?

திருமாவளவனுக்கு பாடமா?

சென்னை, செப். 12- சமூகநீதி குறித்து தமது தலைவர் தொல்காப்பியன் திருமாவளவனுக்கு பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை என்று சமூகநீதித்துறை அமைச்சரும், விசிக துணைப் பொதுச்செயலாளருமான வன்னி அரசு தெரிவித்துள்ளார். பாஜக அரசு முன்னேறிய சாதியினருக்காக மட்டுமே செயல்படும் அரசாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக, 2019 ஜனவரி 8-ம் தேதி 103-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் அறிமுகப்படுத்தி நிறைவேற்றியது. மறுநாள் ஜனவரி 9-ம் தேதி மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஜனவரி 12-ம் தேதி குடியரசுத் தலைவர் அந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார்.
இதை எதிர்த்து எமது தலைவர் எழுச்சித்தமிழர் தொல்காப்பியன் திருமாவளவனும், கட்சியின் பொதுச்செயலாளர் முனைவர் ரவிக்குமாரும் உச்சநீதிமன்றத்தில் W.P.(C) No. 182/2019 வழக்குத் தொடர்ந்தனர். நாட்டின் மிகச்சிறந்த அரசியலமைப்புச் சட்ட அறிஞரான வழக்கறிஞர் கௌதம் பாட்டியா தலைமையிலான குழு, EWS சட்டத்துக்கு எதிராக 70 பக்க விரிவான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தது. விசாரணையின்போது, மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா, தலைவர் எழுச்சித்தமிழர் சார்பில் 34 பக்க எழுத்துப்பூர்வ வாதத்தைச் சமர்ப்பித்ததுடன், நேரிலும் வாதாடினார். 2022 நவம்பர் 11-ம் தேதி, எமது தலைவர் எழுச்சித்தமிழர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்த வழக்கில், பொருளாதார அளவுகோலின்படி இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் 3:2 என்ற பெரும்பான்மையில் தீர்ப்பளித்தது. மருத்துவப் படிப்புக்கான மத்தியத் தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று நாட்டிலேயே முதன்முறையாக, 27.06.2019 அன்று அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை தலைவர் எழுச்சித்தமிழர் சந்தித்து வலியுறுத்தினார். அதன்பிறகே திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டு கட்சிகள் இந்த விவகாரத்தை எடுத்துக்கொண்டு சட்டப்போராட்டம் நடத்தின. ஓபிசி சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி விசிக சார்பில் தலைவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். கோவிட் பெருந்தொற்று காலத்தில், கிரிமிலேயர் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி 10.07.2020 அன்று தலைவர் எழுச்சித்தமிழர் தலைமையில் இணையவழி கருத்தரங்கு நடைபெற்றது.