
சென்னை: நவ.7-
இமயமலையில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 17,244 அடி (5,256 மீட்டருக்கு மேல்) உயரத்தில் உலகின் மிக உயரமான ரயில் நிலையத்தை அமைக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. லடாக்கின் டாங்லாங் லா கணவாய் அருகே அமையவுள்ள இந்த நிலையம், திபெத்தில் உள்ள சீனாவின் டாங்குலா ரயில் நிலையத்தின் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இமாசலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் பகுதியை, மணாலி வழியாக லடாக்கின் தலைநகர் லேவுடன் இணைக்கும் வகையில் 489 கிலோமீட்டர் தொலைவுக்கு புதிய ரயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்துக்கான மதிப்பீடு ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. கடினமான இமயமலை நிலப்பரப்பு மற்றும் செங்குத்தான மலைப்பகுதிகள் வழியாக இந்த பாதை செல்ல இருப்பதால், சுமார் 270 கிலோமீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதிக உயரப் பகுதிகளில் நிலவும் ஆக்சிஜன் குறைபாடு மற்றும் கடுமையான குளிரை சமாளிக்கும் வகையில், அழுத்தப்பட்ட மற்றும் வெப்பமூட்டப்பட்ட ரயில் பெட்டிகளைப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளை ஒட்டியுள்ள லடாக்குக்கு குளிர்காலத்திலும், எந்தவொரு காலநிலையிலும் ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் வீரர்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் கொண்டு செல்ல இந்த ரயில் பாதை உதவும் என நம்பப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வே பல சவாலான மலைப்பகுதிகளில் புதிய பாதைகளை அமைத்து வருகிறது. காஷ்மீரில் செனாப் ரயில் பாலம் வழியாக ரயில் சேவை தொடங்கப்பட்டதுடன், மிசோரம் மாநிலம் ஐசால், சிக்கிமின் கேங்டாக், நாகாலாந்தின் கோஹிமா, மணிப்பூரின் இம்பால், அருணாச்சலப் பிரதேசத்தின் பாசிகாட் ஆகிய பகுதிகளுக்கும் ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திபெத்தில் உள்ள டாங்குலா ரயில் நிலையம் 5,068 மீட்டர் (16,627 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. லடாக்கில் திட்டமிடப்பட்டுள்ள புதிய நிலையம் இந்த சாதனையை பின்னுக்குத் தள்ளும் என கூறப்படுகிறது.













