Home மாவட்டங்கள் பெங்களூர் நண்பனைக் கொன்று அவனது வீட்டில் உப்மா சாப்பிட்ட குற்றவாளி கைது

நண்பனைக் கொன்று அவனது வீட்டில் உப்மா சாப்பிட்ட குற்றவாளி கைது

கதக்: அக். 22-
பணப் பிரச்சினை காரணமாக உயிர்த்தோழனையே கோடாரியால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் நரகுந்த தாலுகா சுரகோடு கிராமத்தில் நடந்துள்ளது.
த்யாமப்பா கொஜனூரு (62) கொலை செய்யப்பட்டவர் ஆவார்; சரணப்பா நரகுந்த என்பவன் கொலைக் குற்றவாளி ஆவான். நண்பனைக் கொலை செய்த பிறகு, அவனது வீட்டிற்கே சென்று உப்மா சாப்பிட்டான் என்ற அதிர்ச்சி தரும் தகவல் விசாரணையின் போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
த்யாமப்பா விவசாயிகளிடம் இருந்து பயிர்களைக் கொள்முதல் செய்யும் தொழில் செய்து வந்தார். இதன்காரணமாக, சரணப்பாவின் பெயரில் 45 குவிண்டால் கடலையைச் சேமித்து வைத்திருந்தார். ஆனால், சரணப்பா த்யாமப்பாவிற்குத் தெரியாமல் அந்தக் கடலையை விற்று, வந்த பணத்தைத் தனது சொந்தச் செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொண்டான்.
கடலை விற்பனை செய்த விபரம் த்யாமப்பாவிற்குத் தெரிந்தால் தனது முறைகேடு வெளியாகிவிடும் என்ற பயத்தில், சரணப்பா தனது நண்பனையே கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற த்யாமப்பா மீண்டும் திரும்பி வரவில்லை. இரண்டு நாட்களாகியும் வீட்டிற்கு வராததால், குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.
இதற்கிடையில், அக்டோபர் 19-ஆம் தேதி த்யாமப்பாவின் சடலம் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது. விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு, த்யாமப்பா கடைசியாகச் சரணப்பாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற தகவல் கிடைத்தது. இந்தத் தடயத்தின் அடிப்படையில் சரணப்பாவிடம் விசாரணை நடத்தியபோது கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
“தோட்டத்திற்குச் சென்று வரலாம்” என்று த்யாமப்பாவை அழைத்துச் சென்ற குற்றவாளி, கோடாரியால் தாக்கிப் படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் சடலத்தைக் கால்வாயின் குழாய்க்குள் மறைத்து வைத்திருந்த தகவலும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பணப் பிரச்சினைக்காக நெருங்கிய நண்பனையே படுகொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.