
பெங்களூர்: அக். 22-
பெங்களூரு ஃபன் வர்ல்ட் பகுதியில் நள்ளிரவு தாண்டிய பின்பும் பட்டாசு வெடித்து அதிக சத்தத்துடன் இசை ஒலிக்கப்பட்ட விவகாரத்தில், நடிகையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரம்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு ஃபன் வர்ல்ட் வளாகத்தில் நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 3 மணி வரை தொடர்ந்து பட்டாசு வெடிக்கப்பட்டும், பலத்த சத்தத்துடன் இசை ஒலிக்கப்பட்டும் உள்ளதாகத் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் ரம்யா பதிவிட்டுள்ளார். இதன் மூலம், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் பரோக்சமாக வலியுறுத்தியுள்ளார்.
பொது விழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளின்போது சில குறிப்பிட்ட விலக்குகளை வழங்குவதை ஏற்றுக்கொள்ளலாம்; ஆனால், அதிகாலை 3 மணி வரை இந்த அளவுக்குச் சத்தம் எழுப்புவது எக்காரணம் கொண்டும் நியாயப்படுத்த முடியாதது என்று அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஃபன் வர்ல்ட் பொழுதுபோக்கு மையத்திற்கு அருகிலேயே மருத்துவமனைகள் இயங்கி வருவதாகவும், சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் முதியவர்களும் பச்சிளம் குழந்தைகளும் வசித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய சூழலில், எழும் கடுமையான இசையும் பட்டாசு வெடிச் சத்தமும் பொதுமக்களின் நிம்மதியைக் குலைப்பதாக அவர் கவலை தெரிவித்தார்.
மேலும், ஒலி மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளைத் தன் பதிவில் சுட்டிக்காட்டியுள்ள அவர், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும், சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதியையும் அவர் நினைவூட்டினார்.
இருப்பினும், இந்த விதிகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு நள்ளிரவு நேரத்தையும் தாண்டித் தொடர்ந்து பட்டாசு வெடிப்பதும், அதிக சத்தத்துடன் இசை இசைப்பதும் எந்த வகையிலும் சரியல்ல என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
காவல்துறைக்குக் கோரிக்கை:
இது தொடர்பாகச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ரம்யா, பெங்களூரு நகர காவல் துறை மற்றும் வடக்குப் பிரிவு காவல் துணை ஆணையர் (DCP) ஆகியோரின் அதிகாரப்பூர்வ கணகுகளைத் டேக் செய்துள்ளார். இதன் மூலம், பொதுமக்களுக்குப் பெரும் தொல்லையை ஏற்படுத்தி வரும் இந்தச் சத்தக் தொல்லைக்கு எதிராக உடனடியாகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்பும் கூட பொது நலன், சுற்றுச்சூழல் மற்றும் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்துத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ள ரம்யா, தற்போது நள்ளிரவு நேரச் சத்தக் கேடு விவகாரத்தில் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.













