
சென்னை: செப். 6-
தமிழில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என்ற உத்தரவை நவம்பர் 1-ஆம் தேதிக்குள் கடைகளில் அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு 2025 ஜூன் மாதம் வெளியிட்ட உத்தரவில், அனைத்து கடைகளும் தமிழில் பெயர் பலகைகளை வைக்க வேண்டும் என்றும், அதற்குக் கீழே ஆங்கில பெயரை சேர்க்கலாம் என்றும் தெரிவித்தது. இந்த உத்தரவை மீறினால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, மும்பை இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி கே. சுரேந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சங்கம் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், உத்தரவை அமல்படுத்த மூன்று மாத கால அவகாசம் கோரினார்.
நீதிபதி, இந்தக் கோரிக்கையை ஏற்று, கடைசி வாய்ப்பாக நவம்பர் 1-ஆம் தேதிக்குள் பெயர் பலகைகளை தமிழில் மாற்ற வேண்டும் என்றும், தவறினால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டார்.













