
வாஷிங்டன்: அக். 5-
நிலவில் ஆதிக்கம் செலுத்தவும், அங்கு நிரந்தர முகாம்களை அமைக்கவும் அமெரிக்கா, சீனா, ரஷ்யா இடையே போட்டி தீவிரமடைந்துள்ளது. இதன் முக்கிய கட்டமாக, நிலவின் தென் துருவத்தில் அணு மின் உலைகளை நிறுவும் முயற்சியில் மூன்று நாடுகளும் ஈடுபட்டுள்ளன.
நிலவில் மனிதர்களைத் தங்கவைக்க தடையற்ற மின்சாரம் அவசியமாகும். பகல் நேரத்தில் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும். ஆனால், நிலவில் இரவு என்பது பூமியின் கணக்குப்படி 14 நாட்கள் நீடிக்கும். அந்தக் காலத்தில் கடுமையான குளிரும் தொடர்ச்சியான இருளும் நிலவுவதால் சூரிய மின்சக்தியைப் பயன்படுத்த முடியாது. எனவே, சூரிய வெளிச்சம் இன்றியும் பல ஆண்டுகள் தொடர்ந்து இயங்கக்கூடிய அணு உலைகளே சிறந்த தீர்வாக இருக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
வரும் 2030-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நிலவில் 20 கிலோவாட் திறன் கொண்ட அணு உலையை நிறுவ அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா இலக்கு நிர்ணயித்துள்ளது. மனிதப் பராமரிப்பு இல்லாமல் ஐந்து ஆண்டுகள் தானாக இயங்கும் வகையில் அந்த உலையை வடிவமைக்க ஒப்பந்ததாரர்களிடம் நாசா கோரியுள்ளது.
ரஷ்யாவும் சீனாவும் இணைந்து ‘செலினா’ என்ற பெயரில் நிலவு அணு உலையை உருவாக்கி வருகின்றன. 10 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்த உலை, மனித உதவியின்றி தொடர்ந்து 10 ஆண்டுகள் இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது. இதனை 2036-ம் ஆண்டுக்குள் நிலவில் நிறுவ இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன. விண்வெளிக்கு அணு உலைகளை அனுப்புவது பேராபத்தை ஏற்படுத்தக்கூடும் என சுற்றுச்சூழல் மற்றும் விண்வெளி வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். உலைகளை ஏந்திச் செல்லும் ராக்கெட்டுகள் விபத்துக்குள்ளானால், வளிமண்டலத்திலும் விண்வெளியிலும் கதிர்வீச்சு பரவும் ஆபத்து இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். 1967-ம் ஆண்டு சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தின்படி, எந்த நாடும் விண்வெளிப் பகுதியையோ நிலவையையோ தனக்குச் சொந்தம் கொண்டாட முடியாது. எனினும், பாதுகாப்பு காரணங்களைக் கூறி சீனா-ரஷ்யா கூட்டணி தங்கள் அணு உலையைச் சுற்றி ‘தடைசெய்யப்பட்ட பகுதி’ என அறிவித்து ஆதிக்கம் செலுத்தக்கூடும் என்ற அச்சம் நாசாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா தனது திட்டங்களை முடுக்கிவிட்டுள்ளது.













